விஷால், சுனைனா, ரமணா ஆகியோர் நடிப்பில் , வினோத்குமார் இயக்கத்தில், விஷால் ஃப்லிம் ஃபேக்டரி தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் லத்தி, இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை தமிழ் திரையுலகில் தங்கப்பதக்கம், காக்கிச்சட்டை, மூன்று முகம் என பல போலீஸ் படங்கள் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்படமும் ஒரு சிறந்த காவல்துறை படமாக இருக்கிறது. அதில் முக்கியமான விசயம் இப்படம் இதுவரை தமிழில் வெளியான போலீஸ் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது.
படத்தின் நாயகன் போலீஸ் என்றாலே அசிஸ்டெண்ட் கமிஷனர், ஐபிஎஸ் ஆஃபீசர், என்றே பார்த்து பழகிவிட்ட தமிழ் திரை ரசிகர்களுக்கு, கான்ஸ்டபிள் பாத்திரம்தான் கதையின் நாயகன் என்பது புதிது, மேலும் விஷால் போன்ற அதிரடி ஹீரோ கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிப்பது புதிதிலும் புதிது.
மனைவி மகன் என எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் கான்ஸ்டபிள் விஷால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருக்கும் விஷால் எப்படியாவது மீண்டும் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற தவிப்பில் இருக்கும்போது, காவல்துறை உயர் அதிகாரியில் சிபாரிசில் மீண்டும் பணியில் சேர்கிறார். தனக்கு மீண்டும் வேலை பெற்றுக்கொடுத்த உயர் அதிகாரியின் சொல்லுக்காக, மிகப்பெரிய தாதாவி மகனான ரமணாவை கட்டி வைத்து லத்தியால் அடிக்கிறார். தன்னை அடித்தது யார் என்று தேடும் ரமணாவுக்கு, தன்னை அடித்தது சாதாரண கான்ஸ்டபிள் என்று தெரிந்துகொள்ளும் ரமணாவுக்கும் விஷாலுக்கும் நடக்கும் போர்தான் லத்தி
படம் முழுக்க அதகளப்படுத்தி இருக்கிறார் விஷால். எளிமையான குடும்பத்தலைவன், சாதாரண காண்ஸ்டபிள் என்று முன்பாதியிலும், அதிரடியாக நூற்றுக்கணக்கான ரௌடிகளை அடித்து துவைக்கும் நபராகவும் திரையை ஆக்கிரமிக்கிறார். விஷாலுக்கு இணையான பாத்திரத்தில் வில்லனாக பயமுறுத்தி இருக்கிறார் ரமணா. எந்த இடத்திலும் எதார்த்தத்தை மீறாத நடிப்பு, காட்சியமைப்பு என புதிய போலீஸ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத்குமார். இதற்காக இயக்குனருக்கும், இக்கதையை தேர்ந்தெடுத்த நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. படத்தின் தன்மைக்கேற்ற மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவுக்காக இப்படம் பல விருதுகளை பெறப்போவது உறுதி. அதே போல் குறிப்பிட்டு பாராட்டவேண்டியவர் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். மிகச்சிறந்த புதிய போலீஸ் படமாக வந்திருக்கிறது லத்தி