மீனவர் பாதுகாப்பில் தொடரும் அரசின் அலட்சியம்
நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விகளையும், அதை தொடர்ந்து ஏற்ப்படும் உயிரிழப்புகளையும் ஒரு அரசு அலட்சியாம கடந்து செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிடாத துறைமுக கட்டுமானம் மற்றும் தடுப்பனைகளால் கடந்த ஒருமாதத்தில் மூன்று மீனவரை இழந்து தவிக்கும் குமரி மீனவ சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆண்டுதோறும் துறைமுகத்தில் கடல்சீற்றம் அதிகரிப்பதும், ராட்சச அலையில் மீனவர்கள் சிக்கி பலியாவதும் வழக்கமான வேதனைதரும் நிகழ்வாக மாறியுள்ளது. கடந்தவாரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை எந்த அளவுக்கு மீனவர் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை அரசுக்கு உரக்க சொல்கின்றன இந்த மரணங்கள்.
அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட துறைமுக வாயிலால், கடல் சீற்றம் குறைக்கப்பட்டு இது போன்ற உயிரிழப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டிருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அரசு தூத்தூர், நீரோடி மற்றும் தேங்காய் பட்டினம் உட்பட மீனவ கிராமங்களில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு செவிசாய்த்து, இதுவரை 19 மீனவர்கள் இறப்பிற்கு காரணமான தேங்காய்பட்டின துறைமுகம் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள 1௦௦ மீட்டர் துறைமுக நுழைவாயிலை குறைந்தபட்சம் 3௦௦ மீட்டர் வரை விரிவாக்கம் செய்வதுடன், இந்தியாவில் அதிக கடல் சீற்றம் கொண்ட பகுதிகளான நீரோடி முதல் கன்னியாகுமரி வரை, கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த, “தூண்டில் வளவு” திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமான பொழிமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்புகள் நிகழும் போதும், இலங்கை கடற்படையால் மீனவர்கள் உயிரிழந்த போதும், மீனவர் பிரச்சனை என துண்டாக்கி தொடர்ந்து மீனவ சமுதாய மக்கள் புறக்கணிக்க படுவதை இனி ஒருகாலும் அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் நகர்ப்புற மக்களுக்கு இணையான பாதுகாப்பு, ஒவ்வொரு மீனவருக்கும் உறுதி செய்யும் வரை, மீனவ மக்களோடு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்..!
நாளை நமதே!
நன்றி
மக்கள் நீதி மய்யம்.