அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’. அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், அந்த பதிலுக்கும் ‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக்கும் உள்ள தொடர்பையும் பரபரப்பான திரைக்கதையோடும், பல ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் கதைக்களமும், அதை படமாக்கிய விதமும் நம் புருவத்தை உயர்த்த வைக்கிறது.

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் கதாநாயகிகளாக அல்லாமல் கதையின் நாயகிகளாக இயல்பாக நடித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பீஜியம் மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன் பயணித்திருந்தாலும், இரவு காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

நேர்த்தியான எடிட்டிங் மூலம் படத்தின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கும் எடிட்டர் பிரகாஷ்ராஜ், ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

முன்னணி ஹீரோக்கள் நடிக்க வேண்டிய சிறப்பான கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை பலவித ட்விஸ்டுகளோடு சொல்லி படம் முழுவதையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, இளைஞர்களுக்கான மெசஜோடு, முழுமையான ஆக்‌ஷன் எண்டர்டெய்னராகவும் படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தில் பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், அஜித்தின் ‘மங்காத்தா’ மற்றும் இயக்குநர் மிஷ்கின் படங்களை பார்த்த அனுபவத்தை கொடுப்பதோடு, நல்ல வாய்ப்பும் தேவையான பட்ஜெட்டும் கிடைத்தால் இந்த குழுவினர் மிகப்பெரிய படத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

மொத்தத்தில், ‘ஃபாரின் சரக்கு’ தியேட்டரில் ரசிகர்கள் கொடுக்கும் பணத்திற்கு முழு திருப்தியை கொடுக்கும்.

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் ‘ஃபாரின் சரக்கு’

நடிகர்கள் : கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா

எழுத்து & இயக்கம் – விக்னேஷ்வரன் கருப்புச்சாமி
தயாரிப்பு – கோபிநாத்
இணை தயாரிப்பு – சுந்தர், விக்னேஷ்வரன் கருப்புச்சாமி
இசை – பிரவீன் ராஜ்
ஒளிப்பதிவு – சிவநாத் ராஜன்.எஸ்
படத்தொகுப்பு – பிரகாஷ்ராஜ்.பி
பாடல்கள் – டி.எம்.சரத்குமார், அருன்சங்கர், பீதாம்பர் சுரேஷ்
பி.ஆர்.ஓ- சுரேஷ்சுகு – தர்மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here