மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில், சாந்தனு, ஆனந்தி, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இராவண கோட்டம். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கிராமத்தில் இரண்டு பிரிவின் தலைவர்களான பிரபு மற்றும் இளவரசு நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதே நேரம் வெவ்வேறு பிரிவை சேர்ந்த சாந்தனு, ஆனந்தி இருவரும் காதலித்து வருகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக சாதிப்பிரச்சினையை தூண்டிவிடும் அரசியல்வாதி அருள்தாஸ் ஏற்படுத்திய பிரச்சினை கொழுந்துவிட்டு எரிய அதை எப்படி நாயகன் சாந்தனு முறியடித்தார் என்பதே இராவண கோட்டம் படத்தின் கதை.
வறண்ட பூமியான் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தை கதைக்களமாகக்கொண்டு உருவாகி இருக்கும் இப்பட்த்தை மண்வாசனையோடு கொடுத்துள்ளார் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். அச்சு அசல் கிராமத்து இளைஞாக தன் நடிப்பால் அசத்தி இருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பது நிச்சயம். பிரபு, இளவரசு, சஞ்சய் சரவணன், அருள்தாஸ், முருகன் என அனைவரும் மண்ணின் மனிதர்களாக மாறி நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு மிகப்பரிய பலம், பின்னணி இசையில் வறண்ட பூமியின் மண்வாசனையை உணரவைக்கிறார். புழுதிக்காட்டில் புகுந்து உலாவருகிறது வெற்றிவேல் மகேந்திரனின் கேமிரா. கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர். நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான கிராமத்து படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது இராவண கோட்டம்
இராவண கோட்டம் : மண்சார்ந்த வெற்றி