சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா , சுனில் ஆகியோர் நடிப்பில், மடோனா அஸ்வின் இயகத்தில் வெளியாகி இருக்கும் படம் மாவீரன். இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைக்க, விது ஐயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மண்டேலா படத்தின் மூலம் தமிழ் திரை ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய இயக்குனர் மடோனா அஸ்வின் இப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய பாணியை விட்டுக்கொடுக்காமல், அதே நேரம் சிவகார்த்திகேயனின் மிக முக்கிய ரசிகர்களான குழந்தைகள் கொண்டாடும்படியாகவும் இப்படத்தை கொடுததற்காக இயக்குனருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.


தானுண்டு தன் வேலையுண்டு என்று யார் வம்பு தும்புக்கும் போகாத, அடித்தட்டு வாழ்க்கை வாழும் சிவகார்த்திகேயன், ஒரு சூப்பர் ஹீரோவாக , மாவீரனாக மாறி எப்படி தன்னை சார்ந்த மக்களை காப்பாற்றுகிறார் என்பதே மாவீரன் படத்தின் கதை. பொதுவாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும் அதையெல்லாம் உடைத்து, எந்த க்ளிஷேவும் இல்லாமல் புதிய சூப்பர் ஹீரோ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். தன்னையும், தன் குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படும் ஹீரோ பாத்திரம், ஹீரோவின் காதுக்கும் மட்டும் கேட்கும் மாயக்குரல் என படம் முழுக்க நம்மை மேஜிக் செய்த்து போல் கட்டிப்போடுகிறது திரைக்கதை.


சிவகார்த்திகேயனின் ஓன் க்ரவுண்ட் இது, புகுந்து விளையாடி இருக்கிறார். குடும்பங்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆல் ஏரியாவும் கொண்டாடும்படியாக நடித்திருக்கிறார். அதிதி சங்கர் அவர்களுக்கு கச்சிதமான ரோல்ச, சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு செய்யும் சின்ன சின்ன அசைவுகள் கூட குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் சரிதாவை பார்ப்பது மகிழ்வை ஏற்படுத்துகிறது, அதே இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். தெலுங்கு திரையுலக நகைச்சுவை சூப்பர் ஸ்டார் சுனில் இப்படத்தில் வித்தியாசமான ரோலில் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் பாத்திர படைப்பும் சரி அதில் நடித்த மிஷ்கினும் சரி சிறப்பிலும் சிறப்பு.


பரத் சங்கரின் இசையும், பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம். வாண்ணார பேட்டையிலே பாடல் ஜாலி ரகம் என்றால், வா வீரா மனதை உருக்கும் ரகம். குறிப்பாக வைக்கம் விஜயலட்சுமி குரலில் க்ளைமாக்ஸில் வரும் மணிக்குயிலே பாடல் மனதை உலுக்குகிறது. சென்னை வாழ் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது விது ஐயன்னாவின் ஒளிப்பதிவு. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது. மொத்தத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் படமாக வெளியாகி இருக்கிறது மாவீரன்
மாவீரன் – மக்களுக்கானவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here