ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம்!

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் தி பிளட்’. (PEARL IN THE BLOOD) கென் கந்தையா இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் சம்பத் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஜெயசூர்யா, காட்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் அறிமுக விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, டாக்டர்.காந்தராஜ், எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலன், நடிகர் போண்டாமணி, இயக்குனர் கணேஷ் பாபு, நடிகர் ஆதேஷ் பாலா, சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ், ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “டாக்டர் காந்தராஜ் ஐயாவின் வீடியோ நிறைய பார்ப்பேன், பிரமித்து போவன். இந்த மாதிரி போல்டா பேச முடியுமா! என்று பிரமித்து போவேன். தற்போது இருக்கும் இளைஞர்களை விட நூறு மடங்கு பேசக்கூடியவர் தான் காந்தராஜ் ஐயா. எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக பேசுவார். அவருடைய வீடியோக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும்.

இந்த படத்தோட வில்லன், கதாநாயகன், கதையை தாங்கி செல்லும் கதாபாத்திரம் என்று சம்பத் ராமை சொல்லலாம். அவர் நடிகர் என்பதை விட என் நண்பர். திருப்பாச்சி உள்ளிட்ட அனைத்து படங்களிலும் அவர் இருப்பார். ஆனால், அவரை பெரிதாக பயன்படுத்தவில்லை என்பது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது. ஆனால், அவர் தொடர்ந்து என் படத்தில் இருப்பார். அதற்கு காரணம், அவரது ஈடுபாடு. சினிமாவை நேசிப்பது, விடாமல் தொடர்ந்து பயணிப்பது, அப்படிப்பட நடிகர்களை பார்க்கும் போது நான் அவர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொள்வேன். அப்படி ஒரு நடிகர் தான் சம்பத் ராம். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு என்று சொல்லலாம். அவரது சிறப்பான நடிப்பை பதிவு செய்த படம், இப்படி ஒரு வாய்ப்பு அளித்த கென் கந்தையாவுக்கு தான் அவர் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பதை பார்க்கும் போது ரத்தம் கொதிக்கிறது. படத்தில் அந்த சிங்கள அதிகாரி அமைதியாக இருந்தாலும், அவரை பார்க்கும் போது நமக்கு எரிச்சல் வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்திருக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரது விருப்பம். ஆனால் , அது நடக்கவில்ல, அதற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டும் குறை சொல்ல கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளும் தான் காரணம். எது எதுக்கோ அனைத்து கட்சி கூட்டம் நடத்தியவர்கள் அங்கு நடக்கும் அவலத்தை தடுக்க நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழனும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இது வியாபாரத்திற்காக எடுக்க்ப்பட்ட படம் அல்ல, தமிழர் என்ற உணர்வுக்காக எடுத்த படம். எனவே இந்த படத்தை உலக தமிழர்கள் அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இப்படி ஒரு படத்தை இயக்கி தயாரித்த கென் கந்தையாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார் இயக்குனர் பேரரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here