மைக்கேல் திரை விமர்சனம்
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், திவ்யன்ஷா, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மைக்கேல். இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான புரியாத புதிர், ஹரீஸ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ‘மைக்கேல்’ சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறது.
90களின் காலகட்டத்தில் மும்பையில் தாதாவாக இருக்கும் கௌதம் மேனனை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்ய, சிறுவனான் மைக்கேல் அவரை காப்பாற்றுகிறார். இதன் காரணமாக மைக்கேலை வளர்க்கும்படி தன் உதவியாளரிடம் சொல்கிறார் கௌதம் மேனன். மைக்கேல் என்ற அந்த சிறுவன் வளர்ந்து இளைஞனாக வரும் கதாபாத்திரத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். மீண்டும் கௌதம் மேனனை கொல்ல முயற்சிப்பவர்களை தேடி வேட்டையாடும் பணியை சந்தீப்பிடம் கௌதம் மேன்ன் கொடுக்க அதன் பிறகு நடப்பவை அதிரடி ஆக்சன்.
ஆக்சன் காட்சிகளில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சந்தீப் கிஷன். மாநகரம் படத்துக்குப்பிறகு, மீண்டும் ஒரு துடிப்பான இளைஞன் பாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் சந்தீப். நாயகி திவ்யான்ஷா அழகாக இருக்கிறார். காதல் காட்சிகளில் மனதை அள்ளுகிறார். கௌதம் மேனன் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கிறது, சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் போர்சன் படத்துக்கு மிகப்பெரிய பலம். விஜய் சேதுபதி வழக்கம் போல் கலக்கி இருக்கிறார். வாயில் சுருட்டு புகையுடன் அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் விஷில் பறக்கிறது.
இது ஒரு கல்ட் மூவி என்பதை சொல்லாமலே உணரவைக்கிறது கிரண் கௌசிக்கின் கேமிரா. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை மிரட்டுகிறது. படத்தின் தன்மைக்கேற்ற ஷார்ப்பான எடிட்டிங் படத்துக்கு பலம். மொத்தத்தில் அதிரடி ஆக்சன் விரும்பிகளுக்கு சரியான படமாக வெளியாகி இருக்கிறது மைக்கேல்.
மைக்கேல்: மாஸ்