ஜெயில் படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது!
ஜெயில் படத்தின் முதல் பாடல் நடிகர் தனுஷ், அதீதிராவ் பாடியுள்ள “காத்தோடு காத்தானேன் ” 7 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜெயில் படத்தின் அடுத்த பாடல் நாளை 18.08.2020 ஆவணி அமாவாசை தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்பாடல் நட்புக்கு மரியாதை செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் உருவாகியுள்ள விதம் குறித்து இப்படத்தின் இயக்குனர் வசந்த பாலன் கூறிய போது…
ஜெயில் திரைப்படத்தின் கதை எழுதும் போது இணையத்தில் கேட்ட “வா நண்பனுக்கு கோவிலக் கட்டு ! அவன் போகமாட்டான் உன்னைத்தான் விட்டு ! ” என்ற பாடல் கதையின் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தது. ஆனால் அதற்குள் அந்த பாடல் லாரன்ஸ் அவர்கள் இயக்கிய காஞ்சனா 3 திரைப்படத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்போது தான் இயக்குநர் இரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டில் உருவான (casteless clollections) கேஸ்ட்லெஸ் கலெக்ஷன் இசைக்கச்சேரியில் பாடகர் மற்றும் கவிஞர் அறிவின் பாடல்களை கேட்டேன். மிக ஆழமான அழகான கவிதை வரிகள் என்னை யோசிக்க வைத்தது. மிக இளமையான கவிஞரும் பாடகரும் கூட. அவரை அலுவலத்திற்கு அழைத்து என் கதையின் சூழ்நிலையை விளக்கி நண்பனுக்கு கோவிலக் கட்டு பாடலுக்கு இணையான அல்லது அதை விடவும் சிறப்பான ஒரு பாடல் வேண்டும் என்று கூறினேன். பாடல் வரிகள் உயர்ந்த நட்புக்கு சமர்ப்பணம் செய்ய தகுதியான பாடலாக அமையவேண்டும் என்று வற்புறுத்தினேன். பாடல் வரிகள் தயாரானதும் பாடலுக்கு இசையமைக்கலாம் என்று ஜீவி கூறிவிட்டதையும் கூறி வரிகள் மீது அதிகம் கவனம் செலுத்தச் சொன்னேன். பாடல்வரிகள் எழுதி வந்த போது இது ஆட்டோவின் பின்னால் எழுதி வைக்கும் அளவிற்கு காலம் தாண்டி நிற்கும் என்று நானும் ஜீவியும் உணர்ந்தோம்.
யார் இந்த பாடலைப்பாடலாம் என்று ஜீவியும் நானும் யோசித்தவாறு இருந்தோம். முதலில் காத்தோடு காத்தானேன் பாடலை ஜீவி தான் பாடியிருந்தார். ஜாக்பாட் பரிசாக நடிகர் தனுஷ் அவர்கள் பாடல் பிடித்துப் போய் தானே பாடி எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தார். நடிகர் தனுஷ் அவர்கள் பாடியதால் கூடுதல் கவனம் பெற்று காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் இப்போது 7 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனக்கு ஜீவியை எப்படியாவது இந்த படத்தில் ஏதாவது ஒரு பாடலை பாடவைத்து விடவேண்டும் என்ற ஆசையிருந்தது. “பத்துகாசு இல்லைனாலும் நான் பணக்காரன்டா! என் சொத்துசொகம் எல்லாமே என் நண்பன் தானடா! ” பாடலை ஜீவி பாடினால் நன்றாக இருக்கும். இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்களின் முஸ்தபா முஸ்தபா பாடலைப் போன்று ஜீவியின் மந்திரக்குரலில் இந்த பாட்டு சிறப்பாக இருக்கும் என்று நம்பி பாட வைத்தேன். நடிகர் ஜீவிக்கு பாடகர் ஜீவியே பாடி இருப்பது படத்தோடு பார்க்கும் போது அத்தனை பொருத்தமாக இருக்கும். இன்றைய பெரும்தொற்று தந்த பொருளாதார நெருக்கடியான நேரத்தில் பத்து காசு இல்லைனாலும் நான் பணக்காரன்டா என்ற வரிகள் அத்தனை எளிதாக மக்களை சென்றடையும். நெருக்கிய நண்பனை ஒரு நிமிடம் நினைத்துப்பார்க்க வைக்கும் என்றே எண்ணுகிறேன். பாடல் பதிவு முடிந்து நான் கேட்டபோது என் நெருங்கிய நண்பனுக்கு வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து நேரில் பேசமுடியாத அன்பை மனதோடு பரிமாறிக் கொண்டேன். பாடலைக்கேட்டு முடித்தபோது உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படக்கூடும் என்றார் வசந்த பாலன்.
பாடலாசிரியர் : அறிவு பாடகர் : G.V.பிரகாஷ்குமார்
இசை : G.V.பிரகாஷ்குமார் இயக்கம் : G.வசந்தபாலன்
ஸ்ரீதரன் மரியதாசன்
ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர் . சினிமா மீதுள்ள காதலால் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை விரைவில் ரிலீஷ் செய்வதோடு அடுத்து பல படங்களை தயாரிக்கவும் . திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதரன் மரியதாசன்.
தயாரிப்பு மேற்பார்வை பி. டி .செல்வகுமார்,கேமரா கணேஷ் சந்திரா ,பாடல்கள் ;கபிலன், அறிவு,இசை ஜி.வி.பிரகாஷ் குமார் ,கதை,திரைக்கதை,வசனம் , இயக்கம் வசந்தபாலன்.
https://youtu.be/gr-3-YZiYOY