நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை.
தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.