பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

லதா மோகன் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள். இவர் ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற தன் நிறுவனத்தின் கீழ், இருபாலருக்குமான 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்திவருகிறார். 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான இவர், ஆண்டிற்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் சவால்கள் சந்தித்துள்ளேன். அழகுக்கலையில் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்ததால், இதை நாம் ஏன் பிசினஸாக செய்யக் கூடாது என்று யோசித்தேன். அதன் படி சென்னை மயிலாப்பூரில் 1981-ஆம் ஆண்டு கன்யாங்கிற பெயரில் முதல் பியூட்டி பார்லரைத் துவங்கினேன்.

வெற்றி கிடைத்தால், சந்தோஷம், இல்லையென்றால் இது ஒரு அனுபவம் என்று நினைத்ததால், எனக்கு எந்த ஒரு பயமும் வரவில்லை. சவால்கள், சிரமங்கள் இருந்தன. அதை எல்லாம் தாண்டி புதிய கிளைகளை துவங்கினேன். நடிகை ஸ்ரீப்பிரியா என்னுடைய நண்பர் என்பதால், அவர் தான் என்னுடைய முதல் மற்றும் மூன்றாவது கிளையை திறந்து வைத்தார்.

எங்கள் அம்மா கைராசிக்காரங்க என்பதால், முதலில் அவர்களை தான் எந்த கிளை திறந்தாலும், முதலில் கல்லாப் பெட்டியில் பணம் போட சொல்வேன். என் அப்பா இது எல்லாம் ஏம்மா? உனக்கு தேவையா? என்றெல்லாம் கூறினார்.

ஆனால் அதுவே நான் பலருக்கு வேலை கொடுக்கிறேன் எனறவுடன், என்னுடைய பேச்சை மீறியும் நீ செய்தது நல்லது தான் என்று பாராட்டினார். தொழிலில் நேர்மை, பேச்சிலும் செயலிலும் நம்பகத்தன்மை, வாடிக்கையாளரை ஏமாற்றக் கூடாது என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

என்கிட்ட சொன்னபடிதான் நான் தொழில் செய்துகிட்டிருக்கேன். அவர் இறக்கும் முன்பு, நீ, உன் தனி அடையாளத்துடன் சாதிச்சுட்ட, ஓர் அப்பாவா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது என்று வாழ்த்தினார். மேலும் இரண்டு, மூன்று நிறுவனங்களின் பெயர்களில் எங்களுக்கு 50-க்கு மேற்பட்ட பார்லர்கள் இருக்கு, இந்திய அளவில் எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சியிலும் இருக்கு என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
Thanks: Sampatth Kumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here