30 வருடமாக சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவர் திருமாறன். ஒரு மிகப்பெரிய வெற்றியை ருசிப்பதற்கான வாய்ப்பு நெருங்கிய சமயத்தில் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நிறைய கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தவர், திருமாறன். 1994ல் வி.சேகர் இயக்கிய “காலம் மாறிப்போச்சு” படத்தில் கடைசி உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின் 1998ம் ஆண்டு “கோல்மால்” படத்தின் மூலமாக பாடலாசிரியராக “வாடா வான்னா”, “ஹே பாப்பா, ஓ பாப்பா” என இரண்டு பாடல்கள் எழுதுகிறார், திருமாறன்.

பின்னர் சினிமாவில் தொடர்ந்து உதவி இயக்குநராக பணிபுரிகிறார், பல திரைக்கதை விவாதங்களில் கலந்துகொள்கிறார், ஆனாலும் ஒரு நிலையான இடமோ வருமானமோ வாழ்க்கையோ கிடைக்காமல் காலம் ஓடுகிறது.

அதன் பின்னர் இராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான, “மாயா” படத்தில், “தத்தக்கா பித்தக்கா” என்ற பாடலை எழுதுகிறார்.

மகளீர்க்காக படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றும் போது, அந்தோணிதாசனை முதல்முறையாக சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் இந்த திருமாறன்.

பாடல் எழுதும் திறமையோடு அதற்கு மெட்டுப்போடும் திறமையும் கொண்டவர் திருமாறன். அவர் எழுதிய பாடல்களை அவரே மெட்டுப்போட்டு அழகாகப் பாடுவார் திருமாறன். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் அவர் வந்துவிட்டாலே பாடச்சொல்லி கேட்டு ரசிப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை, பாடகராக இசையமைப்பாளராக வளர்ந்திருந்த அந்தோணிதாசனிடம் ஒரு பாடலைப்பாடுகிறார் திருமாறன். மிக அழகான செறிவான கருத்துகள் கொண்ட அந்தப்பாடல் அந்தோணிதாசனுக்குப் ரொம்பவே பிடித்துப்போக இந்தப்பாடலை நானே எங்களது இசை லேபல் “ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்” மூலமாக வெளியிடுகிறேன் என்று திருமாறனிடம் கூறுகிறார்.

1998க்குப் பின் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பாடலாசிரியராக வெளிச்சத்திற்கு வருகிறார், திருமாறன்.

அந்தோணிதாசன் இசையில், திருமாறன் எழுதிய “சுதந்திர தேசமே வந்தே மாதரம்” பாடலை, சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், அந்தோணிதாசன், கேசவ் ராம், ரீத்தா அந்தோணிதாசன், ஹஷ்வந்த், மீனாட்சி இளையராஜா மற்றும் குட்டிப்பாப்பா ரௌடிபேபி வர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர்.

விரைவில் ஒரு படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நேரத்தில், உடல் நிலை சரி இல்லாமல் திடீர் மரணம் அடைந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமாறனுக்கு மனைவியும் மகளும் உள்ளனர். மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருமாறனின் இறுதிச் சடங்கு நிகழ்வு நாளை அம்பத்தூரில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
பிரபா (மகள்)
73587 30423

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here