தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று (08/04/2024) தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சூளைப்பள்ளம் பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: அத்தியாவசிய ஆதார விலை வேண்டி விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட பொழுது டெல்லியில் அவர்களை நுழையவிடாமல், சாலைகளில் ஆணிகள் வைத்தும் ட்ரோன்கள் மூலம் புகைக் குண்டுகளை வீசியும் நவீன ஆயுதங்களாகும் தாக்கியுள்ளது பாஜக.
சமையல் எரிவாய்விற்கு மானியம் வழங்குவதாகக் கூறி இதுவரை ஒரு ரூபாய் பாஜக வழங்கி உள்ளதா என்றால் இல்லை, நாம் ஆட்சி அமைந்த உடன் சமையல் எரிவாய்வின் விலை ரூபாய் 500 ஆகக் குறைக்கப்படும், அதேபோல் பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும்.
திமுக அரசு சொன்னால், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும், பெண்களுக்குப் பேருந்து இலவச பயணம் என்ற விடியல் பயணம் திட்டத்தைக் கொண்டு வந்து மாதத்திற்குத் தோராயமாக 800க்கும் மேல் சேமிக்கும் வாய்ப்பை அரசு உருவாக்கியுள்ளது,
அதேபோல் மகளிருக்குக் கலைஞர் உரிமைத் தொகை, உதவித்தொகை கூட என்று இல்லாமல் மகளிருக்கான உரிமை என மாதந்தோறும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழக்கு வருகிறது எனத் தெரிவித்தார்.