வட தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது.
இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். ஆரம்பத்தில் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்க, இருவரும் உடல் ரீதியாக ஒன்றினைந்து விடுகிறார்கள். இதனால், நாயகி கர்ப்பமடைந்து விடுகிறார். கர்ப்பமடைந்த நாயகி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனிடம் கேட்க, அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால், நண்பனின் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைக்கும் சாதி வெறிப்பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, அவரது காதல் வெற்றி பெற்றதா? என்பதையும், தலித் இளைஞரின் படுகொலைக்கான பின்னணி மற்றும் அதை தெரிந்துக் கொண்ட தந்தையின் நடவடிக்கையை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘செம்பியன் மாதேவி’.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபன், நாம் பத்திரிகை செய்திகளாக படித்து விட்டு கடந்து போகும் பல கசப்பான சம்பவங்களை அதிர வைக்கும் காட்சிகளாக நம் கண்முன் நிறுத்தி இதயத்தை கனக்க செய்திருக்கிறார்.
படத்தை இயக்கி, தயாரித்து, இசையமைத்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், எந்த இடத்தில் நாயகனுக்கான தனித்துவத்தை காட்டாமல் கதையின் நாயகனாக பயணித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சக மனிதர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சமமாக பழகுவது, சாதி வெறியர்களால் தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொந்தளிப்பது என உணர்வுப்பூர்வமாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்ச ரேகாவுக்கு கதாநாயகிக்கான அம்சங்கள் குறைவாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு பொருந்துவதோடு, கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் தன் காதலனை திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும், என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தும் இடம் வலி மிகுந்ததாக இருக்கிறது.
ஜெய்பீம் மொசக்குட்டியின் லீலைகள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், நிறையவே முகம் சுழிக்க வைக்கிறது. ஆனால், நகைச்சுவை என்பதால் அவரது கள்ளத்தனத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம். மணிமாறன், ரெஜினா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
லோக பத்மநாபன் இசையில், அரவிந்த், லோக பத்மநாபன், வா.கருப்பன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக இருக்கிறது. ஏ.டி.ராமின்
பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.ராஜ சேகரின் கேமரா, காட்சிகளை எளிமையாக படமாக்கினாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களின் வலிகளையும் ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் பணியும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
முதல் படத்திலேயே நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு என பல களங்களில் பயணித்திருக்கும் லோக பத்மநாபன், தற்போதும் நாட்டின் எதாவது ஒரு பகுதியில் நடந்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதிய வன்கொடுமையில் காதலர்களும், அவர்களது எதிர்கால கனவுகளும் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
சாதி பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகள் பற்றி பேசும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துக் கொண்டிருந்தாலும், யாரையும் குறை சொல்லாமல், நடந்த சம்பவங்களை மக்கள் முன் வைத்து, நியாயம் கேட்டிருக்கும் இயக்குநர் லோக பத்மநாபன், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சினிமா மூலம் தனது சமூகப் பணியை சிறப்பாக செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.