தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர்.
சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடகத் தந்தை மற்றும் தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாடகங்களை மேடையில் அரங்கேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதுவையில் உயிரிழந்தார்.