B.G.பிக்சர்ஸ் சார்பில் ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இதுதான்.

இசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வி பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணி மிக குறைந்த வயதிலேயே கடந்த வருடம் இந்த உலகை விட்டு மறைந்தது திரையுலகுக்கும் இசையுலகுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. நேற்று (பிப்-12) அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டும் ஒரு சேர அனுஷ்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரது இசையமைப்பில் கடைசியாக உருவாகியுள்ள ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையை இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டார்.

மேலும் இசைஞானி இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ .எம். பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர்.

பின்னர் இளையராஜா பேசும்போது, “இன்று தான் பவதாரிணி பிறந்தநாளும் கூட. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பிறந்த நாளும் அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. பெரும்பாலும் இப்படி யாருக்கும் அமைந்ததில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை பவதாரிணி இசையமைத்து பாடிய பாடல்களை இங்கே எனது குழுவினர் பவதாரிணியின் நினைவாக இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். பவதாரணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் என்னால் மறக்க முடியாதது” என்று நெகிழ்வுடன் கூறினார்.

கவிஞர் சினேகன் பேசும்போது, “நடந்தது நிஜமா, இல்லையா என்று நம்ப முடியாத ஒரு சூழலில் இந்த ஒரு வருடம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இசைஞானியின் நந்தவனத்திற்குள் அதிர்வு இல்லாமல் இசைத்துக் கொண்டிருந்த வீணை போல சகோதரி பவதாரணியின் அன்பும் இசையும் அவ்வளவு அழகாக இருக்கும். சகோதரர்கள் கார்த்திக் ராஜா, மற்றும் யுவன் கூட அவர் வெளிப்படுத்தும் அன்பை பார்க்கும் போது எனக்கே பொறாமையாக இருக்கும். அந்த அன்பில் ஒரு நிஜம் ஒளிந்திருக்கும். இரண்டு பேருமே பவதாரிணியை ஒரு தேவதை மாதிரி தாங்கி கொண்டிருப்பார்கள்.

இசைஞானி இளையராஜா எதையுமே பெரிதாக வெளிகாட்டி கொள்ள மாட்டார். என்றாலும் பவதாரணி மீது அந்த ஆகாயம் அளவிற்கு அன்பை மனதிற்குள் வைத்திருப்பார். இன்று அந்த இசைக்குயில் நம்முடன் இல்லை என்றாலும் காற்று உள்ளவரை அவர் இசைத்த ஒவ்வொரு ஸ்வரமும் ராகமும் நம்முடன் கலந்து இருக்கும். அவருடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி உள்ளேன். புயலில் ஒரு தோனி படத்திலும் நான் பாடல் எழுதி உள்ளேன். அதில் கார்த்திக் ராஜா கூட ஒரு பாடல் பாடியுள்ளார்.

தனக்கு என்ன தேவை என்பதை பாடலாசிரியர்களிடம் அழகாக கேட்டு வாங்கக் கூடியவர் பவதாரிணி. அந்த வகையில் அவருடைய வாழ்வு தொடரில் நானும் ஒரு ஓரத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஈசன் ஆகியோர் அவரது இசையை நேசித்து தான் பவதாரிணியை இந்த படத்திற்கு இசையமைக்க வைத்தார்கள்.

பவதாரிணி இருக்கும்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நினைத்தோம். ஆனால் இன்று இசைஞானி இளையராஜா தலைமையில் இந்த விழாவில் நடத்தும் சூழல் ஏற்பட்டுவிட்டது. காற்று உள்ளவரை பவதாரிணியின் இசையும் குரலும் எங்கும் பரவி இருக்கும். ஆயிரத்தில், லட்சங்களில் ஒரு குரல் பவதாரிணியின் குரல். தென்றலுக்கு தலை சீவி விட்டது போல ஒரு சுகமான குரல் அவருடையது. அதுபோல இனி ஒரு குரல் இங்கே வர வாய்ப்பு இல்லை. இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கு படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here