‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்
15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !

இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது.

எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.

2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.

இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா. முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரிய வெற்றி பெற்றன.

இந்தப் படத்தில் வரும் சந்தானத்தின் ‘நண்பேன்டா’ என்கிற வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவராலும் பேசப்பட்ட ஒன்று. அதே நண்பேன்டா என்ற பெயரில் ஒரு படமே வந்தது என்றால் அந்த வசனத்தின் வீச்சை அறிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிடும் விதமாக சந்தானம் அந்தப் படத்தில் தல -தளபதி என்று பேசிய காமெடி பெரிய அளவில் ரசிகர்களைப் போய்ச் சேர்ந்து பேசப்பட்டது. அது மட்டுமல்ல, ஆர்யா நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகள், சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் என வணிக வெற்றிக்கான பல அம்சங்களும் அதில் இணைந்திருந்தன. அப்படிப்பட்ட ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படம் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பத்தின் மெருகேற்றலுடன் வெளியாகிறது.
இந்தப் படத்தை ராஜேஷ் எம் இயக்கியிருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘சிவா மனசுல சக்தி’ படமும் கூட மீண்டும் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றது என்பது, அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வரிசையில் இப்போது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படமும் வெளியாக உள்ளது.

வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் சார்பில் இப்படத்தை கே. எஸ். சீனிவாசன் தயாரித்திருந்தார். இப்போது குரு சம்பத்குமாரின்
அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம்
மீண்டும் மறுவெளியீடாக இதை வெளியிடுகிறது. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்தப் படம் கோடைக்கால விருந்தாக தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் வெளியாகிறது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here