தொழில் ஒத்துழைப்பு சம்பந்தமான அறிக்கை
எவ்வித காரணமுமின்றி எங்கள் அசோசியேஷனின் யூனிட் முதலாளிகளான மூன்று உறுப்பினர்கள் மீது 07/04/2025 முதல், லைட் மேன் யூனியன் நிர்வாகிகள், முன் அறிவிப்பு இல்லாமல் தொழில் முடக்கத்தை அறிவித்ததன் அடிப்படையிலும், அப்பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதாலும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 15/04/25 அன்று சின்னத்திரை, பெரிய திரை சம்பந்தமான அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும், எங்களது அவுட்டோர் யூனிட் உபகரணங்களை அனுப்புவதில்லை எனும் முக்கிய முடிவை அறிவித்திருந்தோம். அதை செயல்படுத்த எங்களது அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
அன்று மாலை வரை பிரச்சனையை துவங்கியவர்கள் அதை முடித்து வைக்க முன் வராததால் நாங்கள் நடைமுறைப்படுத்திய முடிவை அடுத்த நாட்களிலும் தொடர்ந்து செயல்படுத்துவது என முடிவெடுத்திருந்தோம்.
இவ்வேளையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் எங்கள் நிர்வாகிகளை அழைத்து பேசினார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர்களும் தொலைபேசி வழியாக பேசினார்கள். எங்களது போராட்ட அறிவிப்பின் காரணமாக சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக் கூறி அடுத்த 16/04/25 நாள் முதல் படப்பிடிப்பு நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தற்போதுள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தாங்களும் முயற்சிகளை முன்னேடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
அனைவருக்கும் முதன்மை முதலாளிகளான அவர்களின் கோரிக்கையை எங்களால் முடியாது என மறுக்க முடியவில்லை. ஆகவே ஒளிப்பதிவு உபகரணங்களை படப்பிடிப்புகளுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்து, அடுத்த நாள் 16/04/25 முதல் அனைத்து விதமான படப்பிடிப்பு பணிகளுக்கும் தேவையான எங்களது அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வழங்கி, தொழில் நடக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அன்று மாலை அவசரமாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அனைவருக்கும் கடிதம் மூலமும், தொலைபேசி வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலில் பிரச்சினைகள் வருவதும், போவதும் காலம் காலமாக தொடர்ந்தாலும், பெப்ஸி தொழிலார்களை பயன்படுத்தியே நாங்கள் இன்றளவும் தொழில் செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வருங்காலங்களிலும், பெப்ஸி தொழிலாளர்களை பயன்படுத்துவதில் எங்களுக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. எனவே உடனடியாக பெப்ஸியும், சம்மந்தப்பட்ட இணைப்பு சங்கமும், எங்கள் மூன்று உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட தற்போதைய பிரச்சினையை, உடனடியாக முடித்து வைக்கவும், சில ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் வெளிமாநில அவுட்டோர் யூனிட் சம்மந்தமான பிரச்சினைகைளை, வெகு விரைவில் தீர்த்து வைக்க ஆவண செய்வார்கள் என பெரிதும் நம்புகிறோம்!
இப்படிக்கு,
தலைவர்
&
பொதுச்செயலாளர்