குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா.
2004-ல் கமலின் ‘விருமாண்டி’ படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல் ‘பருத்தி வீரன்’ இவருக்கு பரவலான ஒரு வெளிச்சத்தைத் தேடித் தந்தது. ஃபிலிம்பேர் உட்பட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என அனைத்து பெரிய கதாநாயகர்களின் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையாகி விட்டார் .
மதுரை மண்ணின் மணம் வீசும் மொழி பேசி தனக்கென ஓர் அடையாளத்தை தேடிக் கொண்டிருப்பவர் சுஜாதா.
அவர் தனக்கான எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை என்ற போதிலும் அவரைப் பற்றி சில செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ,அவரைச் சந்தித்தபோது.
நிறைய படங்கள் நடித்து விட்டீர்கள் .இப்போது முதல் பட அனுபவத்தை நினைவு கூர முடியுமா?
நான் இதுவரை 90 படங்கள் முடித்து விட்டேன். விரைவில் நூறைத் தொட இருக்கிறேன். எனது கணவரின் நண்பர் பிரளயன் மூலம்தான் எனக்கு ‘விருமாண்டி ‘பட வாய்ப்பு வந்தது.அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன் .எனது இரண்டாவது மகள் சுபிக்ஷா வயிற்றில் இருந்தாள். எனவே அதன்பின் வந்த படவாய்ப்புகளில் நடிக்கவில்லை.
மகள் பிறந்து சற்று வளர்ந்தவுடன் நடிக்க ஆரம்பித்தேன்.இப்படிச்சில காலம் இடைவெளிக்குப் பிறகு நான் நடித்து பருத்திவீரன் வெளிவந்தது.
‘பருத்திவீரன் ‘உங்களுக்குப் பெரிய அடையாளம் அல்லவா?
பலரைப் போல எனக்கும் பருத்திவீரன் ஒரு பெரிய அடையாளம் தான்.இந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் பிலிம்பேர் விருது எனக்குக் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இந்த விருது எனக்குக் கிடைத்ததில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.அது மட்டுமல்ல விஜய் விருது, ஆனந்த விகடன் விருது போன்று பல விருதுகளும் எனக்குக் கிடைத்தன. சுஜாதா பாலகிருஷ்ணன் என்று அறிய விரும்பிய நான், அது முதல் பருத்திவீரன் சுஜாதா என்று அறியப்படுகிற பேசப்படுகிற அந்தளவுக்கு பருத்திவீரன் எனக்கு முக்கியமான படம்.இதற்குக் காரணம் இயக்குநர் அமீர்சார்தான்.
படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டால் படங்கள்தான் என்னைத் தேர்வு செய்கின்றன என்று சொல்வேன். பெரும்பாலும் இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் ,பொருத்தமாக இருக்கும் என்று அவர்களாகவே தேர்வு செய்து கொண்டுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள்.
பெரும்பாலும் மதுரை மொழி பேசியே நடிக்கிறீர்களே?
என்னிடம் வரும் படங்கள் அப்படித்தான் இருக்கின்றன.பெரும்பாலும் என்றில்லை வருகிற எல்லாமும் அப்படித்தான் இருக்கின்றன. படப்பிடிப்பில் கூட என்னிடம் காட்சிகளையும் வசனங்களையும் சொல்லிவிடுவார்கள். உங்கள் பாணியில் உங்கள் மொழியில் பேசி நடித்து விடுங்கள் என்றுதான் சொல்வார்கள். என்னிடம் வரும் படங்கள் எல்லாம் அப்படி மதுரை சார்ந்த படங்களாகவே இருக்கின்றன.
வேறு வட்டாரத்தின் ஸ்லாங் பேசி நடிக்க நான் நினைக்கவே இல்லை.
என்னிடம் வரும் வாய்ப்புகள் எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
நடித்ததில் வித்தியாசமான வாய்ப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
எத்தனையோ படங்களில் மதுரை வட்டார மொழி பேசி நடித்தாலும் கோலி சோடாவில் நான் நடித்த ஆச்சி பாத்திரம் வித்தியாசமானது என்று சொல்வேன். பலரும் நேரில் என்னிடம் அது பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.
இதுவரை மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
பருத்திவீரன் சமயத்திலேயே பாரதிராஜா சார் பாராட்டியதை மறக்கமுடியாது.இந்த பொண்ணு மிக நன்றாக நடித்திருக்கிறார் .எதிரில் கேமரா இருக்கிறது என்கிற எந்தவிதமான உணர்வும் இன்றி நடிக்கிறார். அந்த அளவுக்கு யதார்த்தமாக நடிக்கிறார்.ஆச்சரியமாக இருந்தது என்று பாராட்டினார்.அதை மறக்க முடியாது.
அண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு படவிழாவில் சேரன் சார் சொன்னார்.ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் இவரது நடிப்பை பார்த்து நாங்கள் எல்லாம் எங்களை மறந்து அழுது விட்டோம் என்றார் .டப்பிங்கிலும் மேலும் பலர் அழுது விட்டதாகச் சொன்னார்.இதுவும் மறக்க முடியாது.
நடித்த கதாநாயகர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
என் முதல் அறிமுகமே விருமாண்டி படத்தில் கமல் கமல் சார் படத்தில்தான். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விஜய் ,அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என எல்லா கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.எல்லாரும் என்னைக் கவர்ந்தவர்கள் தான்.
சமீபகாலமாக, இப்போதெல்லாம் சுஜாதா குடும்பத்தைக் கவனிப்பதாகவும் அதனால் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும் அவர் கையில் படங்களும் இல்லை என்றும் ஒரு செய்தி வந்ததே?
எப்படி இந்தச் செய்தி வந்தது என்று தெரியவில்லை. யாரோ அவிழ்த்து விட்ட கதை போல் இது தெரிகிறது.எனக்கு யார் மீதும் கசப்பும் இல்லை. எனக்கு யாரும் விரோதிகளும் இல்லை.அப்புறம் எப்படி இப்படி?அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில் கூட என் நகைதான் காணாமல் போகும் .அந்தப் பழி கதைநாயகன் ராஜாக்கண்ணு மேல் விழும்.இந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனையாக மாறும். அந்தப் படம் பற்றி இப்போது நாடே பேசிக்கொண்டிருக்கிறது.இப்படி என் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த வாரத்தில் கூட நான் நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘வேலன்’, ‘மதுரை மணிக்குறவர்’ என இரண்டு படம் இந்த மாதமே ரிலீஸ் ஆகவிருக்கிறது. நான் நடித்து வெளிவர வேண்டிய படங்கள் சில உள்ளன. சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் மதுரையில் இருந்து கொண்டுதான் படங்களில் நடித்து வருகிறேன்.இதை அறிந்து கொண்டுதான் எனக்கு திரைப்பட வாய்ப்புகளும் வருகின்றன.
கொரோனா காலத்தில் உலகமே முடங்கிக்கிடந்த போதுதான் நான் நடிக்காமல் இருந்தேன்.
குடும்பத்துக்காக நடிப்பை தவிர்க்கிறேன் என்பதெல்லாம் தவறு. எனக்குக் குடும்பம் முக்கியம். அதேபோல நடிப்பும் முக்கியம்.
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டுதான் 90 படங்களில் நடித்திருக்கிறேன். இதில் குடும்பமா நடிப்பா என்று புதிதாகச்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
எல்லா நடிகர்களுக்கும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. அது போல் தான் எனக்கும்.மகள்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள்.
மூத்தமகள் ஸ்ருதிப் பிரியா வேலைக்கு செல்கிறாள். சின்னவள் சுபிக்ஷா படித்துக் கொண்டிருக்கிறாள். எனவே எனது குடும்பப் பொறுப்பு குறைந்திருக்கிறது .இப்போது எனக்கு எந்தவித குடும்ப அழுத்தங்களும் கிடையாது. அதனால் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன பொய்ச்செய்திகளை வதந்திகளை நம்ப வேண்டாம்
சமீபத்திய மகிழ்ச்சி?
என் முதல் படம் ‘விருமாண்டி’யில் நடித்தபோது ஏராளமான பேர் நடித்தார்கள்.அதேபோல் ‘ஆனந்தம் விளையாடு ‘பட அனுபவமும் மறக்கமுடியாது, அதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.மேடையிலேயே நாங்கள் 40 பேர் போல இருந்தோம் .அந்த அளவுக்கு ஏராளமான பேர் நடித்த படத்தில் நான் நடித்தது மறக்க முடியாதது. படத்தில் நான் அழுது நடித்திருந்தாலும் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.