தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மாறன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இயக்குனர் அமீர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேர்மை மற்றும் துணிச்சலுக்கு சொந்தக்காரரான பத்திரிக்கையாளர் ராம்கி, எதற்கும் பயப்படாமல் நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு பலனாக ராம்கி கொல்லப்படுகிறார். பள்ளிப்பருவத்திலேயே தந்தை ராம்கியை இழக்கும் தனுஷ் தன் தங்கையை ஆடுகளம் நரேன் உதவியுடன் தங்கையை வளர்க்கிறார். தன் தந்தையை போலவே இன்வெஸ்டிகேசன் ஜர்னலிட்டாக உருவெடுக்கும் தனுஷ், தன்னுடைய அதிரடிகளால் அரசியல்வாதியான சமித்திரக்கனியின் பகையை சம்பாதித்துக்கொள்கிறார். தனுஷிடமிருக்கும் ஆதாரங்களை பெற முயற்சிக்கும் சமுத்திரகனி தரப்பு தனுஷுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தனுஷின் தங்கை ஸ்மிருத்தி வெங்கட் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். தங்கையின் கொலைக்கு சமுத்திரகனிதான் காரணம் என்று தனுஷ் உணர்ந்து கொண்டாலும் சரியான ஆதாரங்கள் இல்லாததால், ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் இறக்குகிறார். நூல் பிடித்து செல்லும் தனுஷுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் அதிர்ச்சிகள் என்ன? என்பதை தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி நிற்பது தனுஷ் மட்டுமே. ஜாலியான ஜர்னலிஸ்ட், கோவமான இளைஞர், தங்கையை பறிகொடுத்த அண்ணன் என பல்வேறு தளங்களிலும் நம்மை ஈர்க்கிறார். ஹீரோயின் மாளவிகா மோகனுக்கு வழக்கமான டூயட் மட்டுமே பாடும் கேரக்டர் இல்லை என்றாலும், மிகப்பெரிய அளவில் கவர்ந்திழுக்கும் கதாபாத்திரமும் இல்லை. தங்கை பாத்திரத்தில் வரும் ஸ்மிருத்தி ஓரளவு மனதில் பதிகிறார்.
அரசியல்வாதியாக சமுத்திரக்கனி மிரட்டி இருக்கிறார்.கையில் துப்பாக்கியுடன் தனுஷுடன் அவர் பேசும் காட்சி செம மாஸ். படத்தின் போக்கை மாற்றுவது அந்தகாட்சியும் சமுத்திரக்கனியின் நடிப்பும்தான்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் ட்விஸ்டை மொத்தமாக தன் முதுகில் சுமந்திருக்கிறார் அமீர். நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தை கண்முன்னே நிறுத்துகிறார். அமீர் தனுஷ் மோதும் சண்டை காட்சி ரணகளம். நிச்சயமாக அமீர் அவர்கள் ஒரு ஆக்சன் ஹீரோ மெட்டீரியல் என்பதை கண்முன்னே கொண்டுவருகிறார். வடசென்னை ராஜன் பாத்திரம் ஒரு மைல்கல் என்றால் மாறன் பார்த்திபன் பாத்திரம் அமீர் அவர்களின் நடிப்பு கேரியரில் மற்றொரு மைல்கல்.
மாஸ்டர் மகேந்திரன் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.
முதல் பாதி யூகிக்க கூடிய நிலையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள் நம்மை எழுந்து அமர வைக்கிறது. க்ளைமாக்ஸ் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.
பாடல்கள் மனதில் பதியவில்லை, எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
வித்தியாசமான படத்தை விரும்புகிறவர்களுக்கான படம் மாறன்.