பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு!

பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’ . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் .

யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார்.

ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். ‘கிராண்மா’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்., தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர் பேசும்போது,

“நான் படம் தயாரிப்பது என்று முடிவு செய்ததும் அதை தமிழில் தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஏனென்றால் இங்கே தான் நல்ல கதைகளையும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களையும் வரவேற்பார்கள். புதுமையான கருத்துகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் இந்த படத்தைத் தமிழில் தயாரித்தேன்.படத்தில் கேரளாவில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஹேமந்த் நாயகனாக நடித்துள்ளார். பிரபலமான நட்சத்திரங்கள் சோனியா அகர்வால், விமலாராமன் சார்மிளா , குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ஆகியோர் நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது நடித்தவர்கள் மட்டுமல்ல அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இது முழுக்க முழுக்க ஒரு ஹாரர் படம் என்று சொல்ல முடியாது. ஹாரரும் கலந்த ஒரு படம். படத்தின் இரண்டாம் பாதி உயிர்பிழைத்தலுக்கான போராட்டம் பற்றியதாக மாறியிருக்கும்.
இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது .அனைவரும் திரையரங்கு சென்று கண்டுகளித்து ஆதரவு தர வேண்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ் பேசும்போது,

“இந்தப் படம் எனக்கு மட்டுமல்ல படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.நடித்தவர்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பௌர்ணமி என ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். குறிப்பாக சோனியா அகர்வால் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவிலானது. இந்தப் படம் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்கும் படியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகை சார்மிளா பேசும்போது ,

“இந்தப் படம் ஒரு நல்ல படம். எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால் ,விமலா ராமன் போன்ற நட்சத்திரங்களுடன் நான் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எங்களைத் தயாரிப்பாளர் சௌகரியமாகக் கவனித்துக் கொண்டது மறக்க முடியாததாக இருந்தது.

இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் இருவரும் கணவன்-மனைவி போல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
ஒவ்வொரு படத்திலும் அவர்களுக்குள்
ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து படப்பிடிப்பில் பாதிப்பு நிகழும் சம்பவம் நடக்கும். இப்படி ஒவ்வொரு படத்திலும் பிரச்சினை வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள்.
இந்தப் படம் ஒரு நல்ல படம் என்று சொல்ல வேண்டும்” என்றார்.

சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா பேசும்போது,

” இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சோனியா அகர்வாலைச் சண்டைக் காட்சிகளில் நடிக்க வைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சோனியா அகர்வால் சண்டைக்காட்சிகளில் தைரியமாக நடித்தார். படத்தின் 80 சதவிகித சண்டைக் காட்சிகளில் அவர் டூப் இல்லாமல் நடித்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா நடிகர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த படமாக கிராண்மா இருந்தது” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகை சோனியா அகர்வால் பேசும்போது,

“இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி அவர்கள் அப்படி வைத்துள்ளார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது பல கதாநாயகர்களுடன் நடித்துள்ளேன். இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்தது. இதை ஏற்றுக் கொண்டு நடித்தேன். தமிழில் இடையில் சிலகாலம் நடிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெப் சீரியல்களில் நடித்தேன்.

என்னுடன் இதே படத்தில் விமலா ராமன், சார்மிளா நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சௌகரியமாக இருந்தது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.பிரபல கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அது ஒரு ரகம் இது ஒரு ரகம் அவ்வளவுதான். பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுமாதிரி பெண்ணைப் பிரதானப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும்.நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.இந்தப் படத்துக்காக இயக்குநர் சொன்ன கதையும் என் பாத்திரமும் பிடித்திருந்தது எனவே ஒப்புக்கொண்டேன். கிராண்மா படத்தில் சண்டைக்காட்சியில் நடித்துள்ளேன். அது பற்றிக் கேட்கிறார்கள் .சண்டைக் காட்சியில் நடிப்பது அபாயகரமானது என்ற பொருளில் கேட்கிறார்கள்.சண்டைக் காட்சிகளில் நடிப்பது சவாலான ஒன்று தான். ஆனால் இந்தப் படத்தில் சரியாகத் திட்டமிட்டு எடுத்ததால் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை. பெண்கள் பலசாலிகள் தான்.பொதுவாகப் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். எல்லா பெண்களுக்குள்ளும் இன்னொரு சக்தி வாய்ந்த பெண் இருப்பாள். இது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.ஒவ்வொரு பெண்ணும் சவால்களைக் கடந்து தான் மேலே வருகிறாள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறதுதானே? அப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் உடனே சுட்டுக்கொல்லணும் என்று தோன்றும். ஆனால் நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது .சட்டம் அதைப் பார்த்துக் கொள்ளும்.
இந்த கிராண்மா படம் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும் .இது திகில் படமா பேய்ப் படமா என்றெல்லாம் கேட்கிறார்கள். பேய் என்றால் அபாயகரமானது பயங்கரமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண் என்பவள் பேயை விட பயங்கரமானவள் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் கருத்துதான் படத்தில் சொல்லப்படுகிறது” இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here