தமிழ் திரையுலகில் த்ரில்லர் படங்களின் காலம் தொடங்கி விட்டது என்று நினைக்கும் அளவுக்கு அடுத்தடுத்து த்ரில்லர் படங்கள். ஒரே ஜேனரில் பல படங்கள் வந்தாலும் அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல சூழ்நிலை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த வகையில் த்ரில்லர் வகையறாவில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் வேழம். புதிய இயக்குனர் என்ற எந்த படபடப்பும் இல்லாமல் நம்மை படபடப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்.
சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் தனக்கு நடந்த கொடூரமான சம்பவத்துக்கு பழிவாங்க துடிக்கிறார் அசோக் செல்வன். பழிவாங்கும் படலத்தில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதை காதல், த்ரில்லர், செண்டிமெண்ட் என பல்வகை உணர்வுகளையும் கலந்து கொடுத்திருக்கிறர் இயக்குனர்.
மன்மதலீலை, ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள், ஓ மை கடவுளே என சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வகை. இப்படி எல்லாவிதமான க்ரவுண்டிலும் சிக்ஸர் அடிக்கிறார். “அசோக்!….. இந்த நாள உங்க டைரில குறிச்சு வச்சுக்கோங்க, தமிழ் திரையுலகில் நீங்க ஒரு பெரிய இடத்துக்கு வரப்போறிங்க”. சிறப்பான கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை நன்றாக செய்திருக்கிறார் ஜனனி.
பாடல்கள் படத்துடன் படத்துடன் ஒன்றி இருப்பது சிறப்பு. பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜானு சந்தர். நீலகிரி மலையை படம் பிடிப்பது ஒளிப்பதிவாளர்களுக்கு இனிப்பு சாப்பிடுவதுபோல! ரசித்து ரசித்து தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் ட்விஸ்ட்கள் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வருகின்றன.
வேழம் சிறப்பான செய்கை