லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தி வாரியார். தங்கப்பதக்கம், காக்கிச்சட்டை, மூன்று முகம், சாமி, காக்க காக்க வரிசையில் மற்றும் ஒரு அதிரடி போலீஸ் படமாக வெளியாகியுள்ளது தி வாரியார் திரைப்படம். இப்படத்தில் நாயகியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
பார்க்க பக்கா ரொமாண்டிக் ஹீரோ போல் இருந்தாலும், கனகச்சிதமாக போலீஸ் கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார் ராம் பொத்தினேனி. சண்டை காட்சிகளில் திரையரங்கை அதிரவிடுகிறார். விசில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார் க்ரித்தி ஷெட்டி. தமிழ் ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடப் போகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதி சில நேரம் ஹீரோவை ஓவர் டேக் செய்துவிடுகிறார். பரபரப்பான ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் வேலையில் இப்படியான ஒரு கொடூர வில்லன் கேரக்டர் செய்ய துணிச்சல் வேண்டும், அந்தவகையில் ஆதிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
புல்லரிக்கும் எமோஷனல் காட்சிகளை சரியான இடத்தில் பொருந்தவைப்பது இயக்குனர் லிங்குசாமியின் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். அது அதிரடி ஆக்சனாக இருக்கலாம், ஒரு சிறு செயலாக இருக்கலாம், அக்காட்சியில் தன்னை மறந்து ரசிகனை விசிலடிக்க வைத்துவிடுவார் லிங்குசாமி. ரன் படத்தின் ஷட்டர் சீன், வேட்டை படத்தில் ஆர்யா லாரியில் அமர்ந்திருக்கும் சீன், பையா படத்தில் கார்தி பேசும் வசனம் என பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வகையில் இப்படத்தில் பல கூஷ்பம்ப் காட்சிகள் நிறைந்துள்ளன.
ரசிகர்களை தாளம் போடவும், எழுந்து நடனமாடவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருகிறார். ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் அதிரடி ஆக்சன் படத்தின் தன்மையை உணர்ந்து பணியாற்றியுள்ளனர். குறிப்பிட்டு பாராட்டும் படியாகன வசனங்கள் அமைந்துள்ளன.
வாரியார் அதிரடி சரவெடி