அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைக்க, வளர்ந்து வரும் இளம் திரைப்பட நடிகை ஹரினி இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலை குணசேகரன் இயக்கியுள்ளார்.

பிரபல இசை நிறுவனமான சிம்பொனி மியூசிக் வெளியிடும் ‘படவேட்டம்மன்’ வீடியோ பாடல் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேன்டெர்னில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஏ.ஆர். ரமேஷ், மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், சிம்பொனி மியூக் நிறுவனத்தின் CEO ஸ்ரீ ஹரி –  விகேஷ்  மற்றும் இசை ஆல்பத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சிம்பொனி மியூசிக் CEO ஸ்ரீ ஹரி பேசுகையில், “படவேட்டம்மன் பாடல் பற்றி என்னிடம் நண்பர் கூறினார். நாங்கள் பொதுவாக எங்கள் நிறுவனத்தில் பிறர் தயாரித்த பாடல்களை வெளியிடுவதில்லை. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பாடல்களை மட்டுமே வெளியிடும். காரணம் எங்கள் நிறுவனத்திற்கு என்று ஒரு தரம் இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர் சுனிலை அழைத்து வாருங்கள் பார்க்கலாம், என்று கூறினேன். ஆனால், பாடலை பார்த்த உடன் நான் மெய் மறந்து விட்டேன். நிச்சயம் இந்த பாடலை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறோம், என்று ஒப்புக்கொண்டேன். அந்த அளவுக்கு பாடலும் அதை படமாக்கிய விதமும் சிறப்பாக இருந்தது. “ என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ் பேசுகையில்“பொதுவாக மேடையில் பேசும் பழக்கம் இல்லை. இந்த பாடல் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த பாடலை இயக்கிய குணசேகரன் எனது சிஷ்யர் தான். பாடல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

நடிகை ஹரினி பேசுகையில், இந்த வாய்ப்பை கொடுத்த ரமேஷ் சார் மற்றும் குணா சாருக்கு நன்றி. இவ்வளவு பெரிய பாடலை என்னை நம்பி கொடுத்த தயாரிப்பாளர் சுனில் சாருக்கு மிகப்பெரிய நன்றி. நடன இயக்குநர் விஜயலட்சுமி எனக்கு சிறப்பாக நடனம் கற்றுக்கொடுத்து ஆட வைத்தார், அவருக்கும் என் நன்றி. இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

நடன இயக்குநர் விஜயலட்சுமி பேசுகையில், “தயாரிப்பாளர் சுனில் இந்த பாடல் பற்றி என்னிடம் சொல்லிய போது, எனக்கு வழக்கமான அம்மன் பாடல் தான் நினைவுக்கு வந்தது. நான் இதுவரை அம்மன் பாடலுக்கு நடனம் அமைத்ததில்லை. இருந்தாலும், பாடல் பற்றி கேட்டதுமே வேப்பிலை, தீச்சட்டி, மஞ்சள் புடவை, ஆக்ரோஷம் என்று என் கற்பனை பயணித்தது. ஆனால், பாடலை கேட்ட பிறகு அனைத்தும் மறந்து விட்டது. காரணம், பாடல் மிக இனிமையாகவும், அமைதியாகவும் இருந்தது. அதேபோல், இயக்குநர் குணசேகரனும், தயாரிப்பாளர் சுனிலும் இந்த பாடல் வழக்கமான அம்மன் பாடலாக இருக்க கூடாது என்றார்கள். அதேபோல் இந்த பாடலில் சோலோ நடனம் ஆடப்போவது யார்? என்று கேட்டதும் ஹரினி புகைப்படத்தை காண்பித்தார்கள், அவரை பார்த்ததும், சார் இந்த பொண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள், நிச்சயம் இந்த பாடலை நான் செய்கிறேன், என்று கூறிவிட்டேன். அதேபோல் பாடல் வரிகளும் மிக நன்றாக இருந்தது. ஆனால், பாடல் வரிகளை எழுதியவர் பெரிய மனிதராக இருப்பார் என்று பார்த்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது முத்துக்குமார் இளைஞர் என்று, மிக சிறப்பாக எழுதியுள்ளார். இந்த பாடலை ஒரே நாளில் படமாக்கி முடித்தோம். தயாரிப்பாளர் சுனில் இவ்வளவு பெரிய விழா நடத்தி பாடலை வெளியிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு யூடியூபில் வெளியிடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த பாடலுக்கும், பாடலில் பணியாற்றியவர்களுக்கும் அவர் மிகப்பெரிய மரியாதை செய்திருக்கிறார். அவர் இந்த பாடலோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பல பாடல்களை தயாரிப்பதோடு, திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும், அதில் நாங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும், என்று விரும்புகிறோம்.” என்றார்.

பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி பேசுகையில், “படவேட்டம்மன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த போது சுனில் யார்? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன், வளர்ந்தவர்களுக்கு வாலாக இருப்பதை விட, புதியவர்களுக்கு தோளாக இருக்க வேண்டும், என்று. அதனால் தான் அழைத்தவுடன் வருவதாக ஒப்புக்கொண்டேன். இந்த மேடையில் இருக்கும் சிம்பொனி சகோதரர்கள், தயாரிப்பாளர் சுனில், ஹரினி, ஏ.ஆர்.ரமேஷ், பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். இந்த பாடலை பார்த்ததும் இது 80, 90 களில் எடுக்கப்பட்ட பாடல் போன்று தெரிந்தது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருந்தது. மிக அழகான வரிகளை முத்துக்குமார் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் சுனிலுக்கு விட்டகுறை தொட்டகுறை இருந்ததால் தான் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். அவருக்கும் படவேட்டம்மனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ரேணுகா தேவி தாயாரின் கோவிலில் அவருடைய தாத்த பிராதான அர்ச்சகராக இருந்தவர். அந்த தொடர்பு தான் சுனிலை இப்படி ஒரு பாடலை தயாரிக்க செய்திருக்கிறது.

சுனில் தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறார். உடும்பன் என்ற திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார். இப்போது இந்த பாடல் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். அவருடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். சுனிலுக்கு அன்னை பரசாக்தியுடைய வாழ்த்துகள்.

ஆடி மாதம் என்றால் ரேணுகா அம்மாளுக்கு மிகவும் விசேஷமான மாதம். ஆடி அமாவாசை அன்று கோடான கோடி பக்தர்கள் அவருடைய சன்னதியில் கூடுவார்கள். அப்படிப்பட்ட ரேணுகா அம்மாவின் வரலாற்றை சொல்லும் விதமாக, தனக்கு இட்ட கட்டளையாக சுனில் தயாரித்திருக்கும் இந்த வீடியோ இசை பாடல் ஏழு சுரங்களாகவும், எட்டு திசைகளிலும் வலம் வரும். இந்த பாடலை பெண்கள், பக்தர்கள் காது கொடுத்து கேட்பார்கள் தன்னிலை மறப்பார்கள், இந்த பாடல் பெரிய வெற்றி பெறும் என்று நான் சொல்வது மக்கள் குரல் அல்ல, மகேஷன் குரல் என்று சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசுகையில், “நான் அம்மனின் தீவிர பக்தன். மாதம் மாதம் திருவேற்காடு கோவிலுக்கு சென்று வருவேன். அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன். எம்.ஜி.ஆர் இருந்தவரை இது தொடர்ந்தது. நான் அம்மனின் செல்ல பிள்ளை. இந்த படவேட்டம்மன் பாடல் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாடலில் நடனம் ஆடிய ஹரினியும், அம்மனும் ஒன்றாக இருந்தார்கள். நான் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாடல் வரிகளும், இசையும், பாடிய விதமும் சிறப்பு.

தயாரிப்பாளர் சுனில் நல்ல மனிதர், பாடலை மிக சிறப்பாக தயாரித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவருடைய மனைவி மும்தாஜ் இருந்திருக்கிறார். மும்தாஜ் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். இதற்காகவே இவர்களை நாம் பாராட்ட வேண்டும். சுனில், மும்தாஜ் மற்றும் அவர்களுடைய மகள்கள் என அவர்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக படவேட்டம்மன் ஆசியுடன் வளமாக  வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here