தூத்துக்குடி நெய்தல் கலை விழா கோலாகலமாக இன்று (28/04/2023) தொடங்கியது. தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள திடலில் நடைபெற்று வரும் நெய்தல் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் பேசியதாவது:
அனைவரையும் வரவேற்று விழா ஏற்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். மனித உயிர் தோன்றியதே கடலில் இருந்து தான், அதற்கு நன்றி கூறவே நெய்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மனிதன் கலை வடிவில்தான் தன்னை வெளிப்படுத்தினான். நமது வாழ்வின் உணர்வை, நுன்உணர்வுகளை, உணவுகளைக் கலையின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் மண்ணின் உணவுகளும் கலையையும் கண்டுகளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, SPIC முழுநேர இயக்குநர் S.R.ராமகிருஷ்ணன், NABARD பொது மேலாளர் ஜோதி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
,ஏப்ரல் 28 இன்று தொடங்கி மே 1-ம் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழா நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.