மிகச்சிறந்த ஒரு கலைப்படைப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ரௌடி பிக்ஸர்ஸ் நிறுவனத்துக்கும், விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணையர்களுக்கும் முதல் நன்றி. உலகம் கொண்டாடும் ஒரு திரைப்படைப்பை உருவாக்கிய இயக்குனர் வினோத்ராஜ் அவர்களுக்கும் அவருடைய குழுவுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
பின் தங்கிய ஒரு கிராமத்தின் எளிய மனிதர்களின் வாழ்வியலை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது என்பது போன்ற சிறந்த படைப்பாக வெளியாகியுள்ளது கூழாங்கல் திரைப்படம். ஆணாதிக்கமும், குடிப்பழக்கமும் கொண்ட கருத்துடையான், கோவித்துக்கொண்டு தாய்விட்டுக்குச்சென்ற தன் மனைவியை பார்க்க, பள்ளியில் படிக்கும் தன் மகன் செல்லப்பாண்டியை அழைத்துக்கொண்டு செல்கிறார் அந்த ஒரு சிறு பயணமே, தமிழ் திரையுலகின் ஒட்டு மொத்த நிண்ட பயணத்துக்கும் இணையான ஒரு பயணம்.
கருத்துடையான், செல்லப்பாண்டி, பேருந்தில் கைக்குழந்தையுடன் இறங்கும் பெண், எலி வேட்டையாடி உண்ணும் குடும்பம், வற்றி வறண்டு போன கிராமத்தின் மக்கள் என யாரும் நடிகர்களாகத் தெரியவில்லை. விக்னேஷ் குமுலை மற்றும் ஜெயா பார்த்திபனின் ஒளிப்பதிவு வறண்ட நிலத்தின் வழியே கதாபாத்திரங்களோடு கண்களை உறுத்தாமல் பயணிக்கிறது. கத்தரியின் சிறு ஓசைகூட எழாத கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணனி இசையில், ஓசையின்மையும் உலக இசையும் கலந்து பாறைகளில் பட்டுத் தெறிக்கிறது .
சிறுவன் சேகரிக்கும் கூழாங்கற்களும், பாம்பும், எலியும், நீரும், சோறும், வெயிலும், புழுதியும், வறண்ட நிலத்தின் வாழ்வியலை பிரதிபலிக்கின்றன. தவிர்க்க முடியாத திரைப்படமாக வெளியாகியுள்ளது கூழாங்கல்
கூழாங்கல்: மைல் கல்